ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவர் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாரத் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பாரத் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று வந்தார். இதனை அறிந்த அவரது தந்தை மகனை கடுமையாக கண்டித்தார்.
இருப்பினும் பாரத் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த டெல்லி பாபு இதுகுறித்து சித்தூர் 2-வது டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாரத்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து கள்ளக்காதலியுடனான தொடர்பை கைவிடுமாறு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
தன் மீது தந்தை போலீசில் புகார் செய்ததால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டிற்கு சென்ற பாரத் தனது கள்ளக்காதலிக்கு வீடியோ கால் செய்தார். தன்னை போலீசில் புகார் செய்த தந்தையை அடித்து உதைக்க உள்ளதாகவும் வீடியோ காலில் இருக்குமாறு தெரிவித்துவிட்டு தந்தையை இழுத்து வந்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தார். இந்த காட்சிகளை அவரது கள்ளக்காதலி பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார்.
அதன்பிறகும் ஆத்திரம் தீராத பாரத் அருகில் இருந்த கட்டையை எடுத்து வந்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டி வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து டெல்லி பாபுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டெல்லி பாபு சித்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.