ஸ்பெயின் நாட்டில் சொரியா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் சமூகவலைதளமான டிக்டாக்கில் தனது 4 நண்பர்களுடன் லைவ் ஸ்டிரீமீங்கில் போட்டி ஒன்றில் பங்கேற்றார். அதில், அதிக பார்வையாளர்களை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். கடந்த மாதம் 28-ம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றது. டிக்டாக் லைவ்வில் பேசிக்கொண்டிருந்தபோது அப்பெண்ணை திடீரென அவரது கணவர் கன்னத்தல் ‘பளார்’ என அறைந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் கண்ணீர் விட்டு அழுதார். இந்த நிகழ்வு அனைத்தும் டிக்டாக் லைவ்-வில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. இந்த நிகழ்வு ஸ்பெயின் முழுவதும் பேசுபொருளானது. பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு எதிராக ஸ்பெயினில் சட்டங்கள் உள்ளன. இதனிடையே, மனைவி கன்னத்தில் கணவன் அறைந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தன் கணவன் மீது போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை. ஆனால், மனைவியை கணவன் அறைந்த சம்பவத்தை பாலின ரீதியிலான வன்முறையின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கணவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கணவர் சொரியா கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதற்காக மனைவியை தாக்கிய கணவனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும், மனைவிக்கு அருகே 300 மீட்டர் (1000 அடி) தொலைக்குள் வரவும் தடை வித்தித்துள்ளது (அல்லது) மனைவியுடன் 3 ஆண்டுகள் பேச தடை விதித்துள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் அந்த நபர் எந்த ஆயுதங்களையும் வாங்க தடை விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.