பருவ மழை மற்றும் குளிர் காலம் முடிவடைந்தாலும் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சென்னையில் காய்ச்சல் பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் கூடிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. டாக்டர்களிடம் சிகிச்சை பெறுவதன் மூலம் 5 முதல் 7 நாட்களில் காய்ச்சல் குணமடைந்தாலும் சளி, இருமல் ஆகியவை 2 வாரங்களுக்கு மேல் தொடருகின்றன. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதில் தொற்றிக் கொள்வதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த காய்ச்சல் எந்த வகை வைரசால் பரவி வருகிறது என்பதை கண்டறியும் ஆய்வை பொது சுகாதாரத் துறை செய்து வருகிறது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:- இன்ப்ளுயன்சா வைரஸ், ஆர்.எஸ்.வி. எனப்படும் நுரையீரல் தாக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் அடினோ வைரஸ் பாதிப்புகள் சென்னையில் அதிகமாக பரவி வருவதாக தெரிகிறது. காய்ச்சல், உடல் வலியுடன் இருமல் பாதிப்பும் இருப்பதால் சுவாசப் பாதையின் மேற் பகுதியில் ஏற்படும் தொற்றாகவே இதை கருத முடிகிறது. இந்த வகை பாதிப்புகள் ஒரு வாரத்தில் குணம் அடைகின்றன. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்த காய்ச்சலை ஏற்படுத்தும் புதிய வகை வைரஸ் எந்த வகையானது என்பதை கண்டறிய பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு செய்ய உள்ளோம். பொது சுகாதாரத் துறை ஆய்வகத்திலேயே அதற்கான வசதிகள் உள்ளன. பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரிய வரும் என்பதால் மக்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல் எளிதில் வகைப்படுத்தி அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.