நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரிய நாட்டு மீனவர்களின் கிராம பஞ்சாயத்து கூட்டம் நேற்றுமுன் தினம் நடந்தது. இக்கூட்டத்தில் பஞ்சாயத்து கணக்காளராக உள்ள சத்தியசீலன்(38) என்பவரிடம் ஊர் முக்கியஸ்தர்கள் 2 ஆண்டுகளுக்கான வரவு, செலவு கணக்குகளை கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து சத்தியசீலன் கணக்கை சமர்ப்பித்துள்ளார். இதில் அவர்களுக்கு உடன்பாடு ஏற்படாததால், கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்று விட்டனர். இதை தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த முன்னாள் மீனவ பஞ்சாயத்து தலைவர் நாகராஜ் மகன் ஆறுமுகம் (34) தரப்பினருக்கும், சத்தியசீலன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருதரப்பினரும் ஒருவரை, ஒருவர் கற்கள் மற்றும் கட்டையால் தாக்கி மோதி கொண்டனர். இதில் சத்தியசீலன், ரவிச்சந்திரன், முத்துசெட்டி, கிருஷ்ணன், செல்வம், ஆறுமுகம், ஜெகநாதன், ஜான்பீட்டர், ரீகன், மணியன் ஆகிய 10 பேர் காயம் அடைந்தனர். இவர்கள், நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (30), செல்லப்பா (60), முரளி (24), மணி(21), ராஜேஷ் (25), பாஸ்கர் (38) கதிர்வேல் (40) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.