வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
மூத்த வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மலைபாங்கான பிரதேசம் என்பதால் இந்த மாநிலங்களில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இரு மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.