அண்மையில் துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் ஆங்காங்கே அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, நியூ பிரிட்டன், பப்புவா நியூ கினியா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதேபோல், இந்தியாவிலும் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
மேகாலயாவில் இன்று காலை 9.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேகாலயாவின் தூர நகரில் இருந்து 27 கி.மீ தொலைவில், பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று பிற்பகலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராஜ்கோட்டில் பிற்பகலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் ராஜ்கோட்டை சேர்ந்த மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.