திருப்பத்தூர் கச்சேரி தெருவில் ஒரு மருந்து கடையில் எப்போதும் அதிகளவில் பெண்கள் கூட்டம் இருந்து வருவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் மாவட்டக்கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சுகாதரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த மருந்துக்கடையில் குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதற்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட வேண்டிய ஆங்கில மருந்துகளை விதிமீறி மருந்துக்கடைக்காரர் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. கடை உரிமையாளர் திருப்பத்தூர் அடுத்த பொன்னேரியை சேர்ந்த சுப்பிரமணி(49), டி-பார்ம் படித்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளாக குழந்தையின்மைக்கு மருந்து கடையில் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. பின்னர், அங்கிருந்த குழந்தையின்மை மற்றும் மலட்டுத்தன்மை நீக்கத்துக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சுப்பிரமணியை திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வருவாய்த்துறையினர் மூலம் மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து சுப்பிரமணியை கைது செய்தனர். இங்கு சிகிச்சை பெற்ற பல பெண்களுக்கு கருப்பை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. பெண்களுக்கு முதுகு தண்டு பகுதியில் ஊசி போடப்பட்டுள்ளதே கருப்பை பாதிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. டி-பார்ம் மட்டுமே படித்துவிட்டு, மருந்து கடை வைத்து ஆங்கில மருத்துவ முறையை பயன்படுத்தி குழந்தையின்மைக்கு சிகிச்சை அளித்த சுப்பிரமணி, அதற்காக பல ஆயிரங்களை வசூலித்துள்ளார். இதன் மூலம் கடந்த 20 ஆண்டில் பல கோடி சொத்துக்களை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது மகனை எம்பிபிஎஸ் படிக்க வைத்துள்ளார். அவரது மகன் பெயரில் கிளினிக் ஆரம்பித்து குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டதும் அதிகாரிகள் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.