Skip to content
Home » ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் .. பிரச்சாரம் ஒய்ந்தது..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் .. பிரச்சாரம் ஒய்ந்தது..

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ச.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

238 வாக்குச்சாவடி மையங்களில், 5 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1 கட்டுப்பாட்டு கருவி, 1 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்படவுள்ளன. இந்நிலையில், இன்று ( பிப்.25) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இறுதி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சம்பத் நகரில் காலை 9 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கி, பெரியவலசு, பாரதி தியேட்டர் சாலை, பேருந்து நிலையம், மஜித் வீதி, கருங்கல்பாளையம் காந்தி சிலை, கே.என்.கே. சாலை, மூலப்பட்டறை, பிராமண பெரிய அக்ரஹாரம், முனிசிபல் காலனி, பன்னீர் செல்வம் பூங்கா ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்து, பெரியார் நகரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியும் பெரியார் நகரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். 25-ம் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு கருத்துக் கணிப்பு, வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை மின்னணு ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதே போல்  வரும் 27-ம் தேதி மாலை 7 மணி வரை, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று (பிப்.25) மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இதை உறுதி செய்ய கல்யாண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *