திருச்சி, நம்பர் 1 டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் கொண்டு மணல் அள்ளி ஒரு இடத்தில் மறைத்து வைத்து லாரிகளில் ஏற்றி விற்கப்படுவதாக லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் நம்பர் 1 டோல்கேட் அருகே பூக்கொல்லை பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஆற்று மணல் மலை போல் குவியியல் குவியிலாக இருந்துள்ளது. மேலும் சேலம் மாவட்டம் கம்பம்பட்டியை சேர்ந்த முருகன் ( 40) லாரி ஓட்டுநர் மற்றும் சமயபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (37) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் மணல் அள்ளி
செல்வதற்காக நிறுத்தபட்ட லாரியும், மணல் அல்ல பயன்படுத்துவதற்கு நிறுத்தபட்ட பொக்கலினையும் லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் பறிமுதல் செய்து கொள்ளிடம் காவல் ஒப்படைத்தார்.
பூக்கொல்லை பகுதியில் மலை போல் குவிக்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்புள்ள மணலையும் பறிமுதல் செய்து வருவாய் துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபடும் என்றும், மேலும் மணல் மாபியா கும்பல் யார் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம் என லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் இதற்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றால் கொள்ளிடம் காவல் நிலைய காவலர்கள் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற மணல் திருட்டுகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.