திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறினர். தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பருத்தி மற்றும் மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எங்களுக்கு பருத்தி மற்றும் மக்காச்சோளத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு மக்காச்சோளத்திற்கு கிலோ 30 ரூபாய் வழங்க வேண்டும் அதேபோல பருத்திக்கு கிலோ 100 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக ஆற்று மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் பூ.விஸ்வநாதன் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர்ந்து விவசாயிகள் மக்காச்சோளம் மற்றும் பருத்தி எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு அளித்து முறையிட்டனர். மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் பெயரில் கலைந்து சென்றனர். விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.