அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ளது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தை அதிமுக இன்று நாட உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் நகலை இன்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சமர்ப்பிக்க உள்ளது. இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுப்ரீம் கோர்ட்டு அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளதால் அந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அதிமுக முறையிட உள்ளது.
இதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று டில்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுப்ரீம் கோர்ட்டு அங்கீகரித்ததற்கான தீர்ப்பின் ஆவணங்களை வழங்குகிறார். இந்த தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.