-1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அவருடன் தமிழர்கள் பலரும் பங்கேற்றனர். அவர்களில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த தில்லையாடி வள்ளியம்மையும் ஒருவர். 1913 ம் ஆண்டு தென்னாப்பிரிக்க சிறையில் அடைபட்ட வள்ளியம்மை, 1914 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி உயிர்நீத்தார் .
காந்தியால் நினைவு கூரப்பட்ட தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கபட்டது. இதனை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள வள்ளியம்மை நினைவு மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார்.
செம்பனார்கோவில் ஒன்றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர்,மாவட்ட ஒன்றிய உறுப்பினர் துளசிரேகா,தில்லையாடி ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தில்லையாடி வள்ளியம்மை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி அவஞ்சலி செலுத்தினர்.பின்னர் மணிமண்டத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்று,ஆவணங்கள், புகைப்படங்கள்,ஓவியங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவை போற்றும் விதமாக தில்லையாடியிலிருந்து மயிலாடுதுறை வரையிலான தியாகச்சுடர் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.