.முன்னாள் முதல்வர்கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர். திருவாரூரில் தான் அவர் இளமைக்காலத்தை கழித்தார்.அங்கிருந்து தான் அவரது பொதுவாழ்வு பயணம் 14வயதிலேயே தொடங்கியது. அந்த வகையில் தற்போதைய முதல்வரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் திருவாரூர் தான் தாய் வீடு. அவர் அடிக்கடி திருவாரூர் வந்து தங்கள் பூர்வீகவீட்டில் தங்கி விடுமுறை நாட்களைகழித்து உள்ளார்.
அப்போது அவர் சன்னதி தெருவிலும், அங்குள்ள கமலாலய குளக்கரையிலும் மாலைப்பொழுதை கழித்து உள்ளார். தற்போது ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று தி ருவாரூரில் உள்ள தங்கள் சொந்த வீட்டுக்கு வந்து தங்கி உள்ளார்.
எத்தனை கோடி கொடுத்தாலும் இளமையும் திரும்பவராது,இளமையின் இனிய நினைவுகளும் திரும்பகிடைக்காது.ஆனால் அவற்றை பிளாஷ்பேக் போட்டு மனக்கண்ணில் பார்க்கலாம், ரசிக்கலாம். அந்த சுகத்திற்கு ஈடு இணைஇல்லை என்பார்கள். அந்த வகையில், இளமை காலத்தின் இனிய நினைவுகளால் உந்தப்பட்டு., முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலைப்பொழுதில் கமலாலய குளக்கரைக்கு வந்தார். அங்கு சிறிது நேரம் சுற்றிப்பார்த்தார். அப்போது மாலை மயங்கிய அந்திப்பொழுது, குளக்கரையை சுற்றிலும் உள்ள இடங்களில் மின்விளக்குகள் எரியவிடப்பட்டன.விளக்கொளியின் பிம்பங்கள் குளத்தில் பிரதிபலிக்கும்அழகை, குளக்கரையில் அமர்ந்து ரசித்தார் ஸ்டாலின். பின்னர் குளக்கரையின் படிக்கட்டுகளில் அமர்ந்தவாறு தேநீர் அருந்தினார்.
அதைத்தொடர்ந்து அவர் கமலாலய குளத்தில் படகுசவாரி செய்தார். இதில் அதிகாரிகள், மற்றும் கட்சியினரும் பங்கேற்றனர்.