Skip to content
Home » சட்டமன்றத்தில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்….ஜனாதிபதிமுர்மு பேச்சு

சட்டமன்றத்தில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்….ஜனாதிபதிமுர்மு பேச்சு

ஜனாதிபதி திரவுபதி முர்மு, 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் அருணாசலபிரதேசத்துக்கு சென்றார். 37-வது மாநில தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மாநில அரசு அளித்த வரவேற்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில், நேற்று அருணாசலபிரதேச சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- வடகிழக்கு மாநிலங்கள் ஒரு காலத்தில் சாலை, ரெயில் மற்றும் விமான போக்குவரத்து வசதிகள் இல்லாமல், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்தன. ஆனால், தற்போதைய மத்திய அரசு, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தனி அமைச்சகத்தை தொடங்கினார். பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, அவரது கனவை தற்போதைய மத்திய அரசு நனவாக்கி வருகிறது.இந்த மாநிலத்தின் கலாசாரங்களையும், பாரம்பரியத்தையும் சட்டசபை உறுப்பினர்கள் பாதுகாக்க வேண்டும். இன்றைய உலகில், சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம் ஆகியவை முக்கியமான பிரச்சினைகள். இவற்றுக்கு நாம் தீர்வு காண வேண்டும். இதற்கு அருணாசலபிரதேச ஆட்சியாளர்கள், ஒரு பிரகடனம் மூலம் தங்களது உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளனர். மற்ற மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஒவ்வொரு துறையிலும் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். அருணாசலபிரதேசம் உள்பட அனைத்து சட்டசபைகளிலும் அவர்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். இதுபோல், மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறும் அனைத்து அமைப்புகளிலும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *