தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கினைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 3680 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென 18 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 6 இயங்கு குழுக்கள் (Mobile Unit) அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் ஆகியோர் இயங்குவர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வை கண்காணிக்கும் பொருட்டு 18 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்திட வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என்றும் கோவிட்-19 நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.