கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்து துளசிக்கொடும்பை சார்ந்தவர் முத்துக்குமார். (வயது 27) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். க.பரமத்தியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். கரூரிலிருந்து வெள்ளியணை நோக்கி சென்று கொண்டிருந்த போது தாளியாபட்டி பிரிவு அருகே நிலை தடுமாறி தனியார் (செட்டிநாடு) சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுமார் 25 அடி ஆழ ரயில் பாதையில் மேம்பாலத்தின் கீழ் தலை குப்புர விழுந்துள்ளார். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வெள்ளியணை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இளைஞருக்கு மது ப்ரியா என்ற மனைவியும், ஒரு வயதில் மகளும் உள்ளனர்.
கரூர் – திண்டுக்கல் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்ட நிலையில் இந்த தனியார் ரயில்வே பாதைக்காக கட்டப்பட்ட மேம்பாலம் அகலம் குறைவாக இருப்பதால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். சாலையின் அகலத்திற்கு ஏற்ப குறுகலான பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.