அரியலூர் – கோயில் நிலங்களில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களுக்கு நிலத்திற்கான உரிமை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்
கோவில், மடங்கள் மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் குத்தகைக்கு சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளின் பாரம்பரிய சாகுபடி நிலங்களை பறிக்கக் கூடாது. சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு நிலத்திற்கான உரிமை பட்டாவை வழங்க வேண்டும். அதேபோல் கோயில் நிலங்களில் குடியிருப்பாளர்களுக்கு தடையின்றி உரிய சான்றிதழ் வழங்க வேண்டும். இயற்கை பேரிடர் பாதிப்பு ஆண்டுகளுக்கான குத்தகை நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும். கோயில் நிலங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் குடியிருப்பாளர்களை அவர்களின் வீட்டு மனையிலிருந்து வெளியேற்றக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கோயில் மனையில் குடியிருப்பவர்கள் மற்றும் தமிழக விவசாய சங்கம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.