திருச்சி புத்தூர் ஆல் செயின்ட்ஸ் தொடக்கப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் பள்ளி கல்வித் துறை (TNSED) இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்.
இம்முகாமில் 175 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். தேசிய குழந்தைகள் நலத் திட்டம் (RBSK) மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 54 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு மருத்துவர்களால் பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாகளுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கு மதிப்பீடு அளவு செய்யப்பட்டது.
இம்முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் நேரில் கலந்துக் கொண்டு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு மடக்கு சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, ரோலேட்டர் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.சந்திரமோகன், அரசு சிறப்பு மருத்துவர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார மேற்பார்வையாளர் மற்றும் சிறப்பு ஆசிரியைகள் கலந்து கொண்டார்கள்.