ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் குண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தன்னுடைய தந்தை பீரோவில் வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை தந்தைக்கு தெரியாமலேயே எடுத்து வந்து தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு செலவு செய்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கு தெரியாமல் எடுத்து வந்த பணத்தை மீண்டும் பீரோவில் வைக்க வேண்டும் என்பதற்காக தனது கிட்னியை விற்பனை செய்வதாக ஆன்லைனில் பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட பிரவின் ராஜ் என்பவர் தான் அமெரிக்காவில் இருப்பதாகவும், அங்குள்ள ஒருவருக்கு இந்தியாவில் உள்ள ஒருவரின் கிட்னி அவசரமாக தேவைப்படுவதாகவும், சிறுநீரகம் கொடுத்தால்ரூ.7 கோடி தருவதாகவும் ஆஸ்பத்திரியின் பெயர், விலாசம், டாக்டரின் போட்டோ மற்றும் வாட்ஸ்அப் எண்ணை பதிவிட்டிருந்தார். இதற்கு சம்மதம் தெரிவித்த கல்லூரி மாணவி தனது தந்தையின் வங்கி எண்ணை பிரவீன் ராஜ் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து பிரவீன் ராஜ் மாணவியின் தந்தை வங்கி கணக்கில் ரூ 3.50 கோடி அனுப்பியதாகவும், அதனை செல்போனில் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து மாணவிக்கு அனுப்பியிருந்தார். மேலும் அமெரிக்காவில் இருந்து டாலரில் பணம் அனுப்பி இருப்பதாகவும் அதை இந்தியாவின் ரூபாய் நோட்டுக்களாக மாற்ற வேண்டுமென்றால் ரூ.16 லட்சத்தை அனுப்பி வைக்குமாறு தெரிவித்திருந்தார். இதனை உண்மை என நம்பிய மாணவி தனக்கு தெரிந்தவர்களிடம் ரூ.16 லட்சத்தை கடனாக பெற்று பிரவீன் ராஜ் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து மாணவி அவரது தந்தையின் வங்கி கணக்கை சரிபார்த்த போது பணம் எதுவும் வரவில்லை என தெரிய வந்தது. மீண்டும் மாணவி பிரவீன் ராஜை அணுகி தந்தையின் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை என தெரிவித்தார். அதற்கு அவர் நீ டில்லிக்கு வந்தால் நேரடியாக பணத்தை தருகிறேன் என்று கூறினார். இதையடுத்து மாணவி விமானத்தில் டில்லிக்குச் சென்று பிரிவின் ராஜ் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அவர் சிறிது நேரத்தில் வருகிறேன் என கூறி கடைசி வரை வராமல் ஏமாற்றி விட்டார். வீட்டிற்கு சென்றால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்பார்கள். வாங்கிய பணத்தை எப்படி திருப்பி தருவது என விரக்தியடைந்த மாணவி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வீட்டிற்கு செல்லாமல் என்.டி.ஆர் மாவட்டம் கன்சிகா சர்லா என்ற ஊருக்கு சென்று விட்டார். நண்பரின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மகளின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் குண்டூர் போலீஸ் சூப்பிரண்டு ஆரிப் அபீசிடம் புகார் செய்தனர். போலீசார் மாணவியின் செல்போன் எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையின் போது முழு விவரத்தையும் மாணவி போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து பட்டாபிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் பணத்தை ஏமாற்றியவர் யார் என விசாரணை செய்து வருகின்றனர்.