திருச்சி மேலகல்கண்டார் கோட்டை சதாசிவம் மகன் இளவரசன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி கோர்ட்டுக்கு கைெ யழுத்து போட வந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடிகள் துரை என்கிற துரைசாமி(30), அவரது தம்பி சோமு என்கிற சோமசுந்தரம் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இவர்கள் இன்று மதியம் திருச்சி அடுத்த குழுமாயி அம்மன் கோயில் அருகே பதுங்கி இருப்பதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று அண்ணன், தம்பி இருவரையும் பிடித்தனர்.
திடீரென ரவுடிகள் இருவரும் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் 2 போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். போலீசார் அவர்களை எச்சரித்தும் அவர்கள் ஓடிக்கொண்டே இருந்தனர். இதனால் போலீசார் அவர்களை நோக்கி 3 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில் இருவரது கால்கள் மற்றும் கைகளில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர்களை போலீசார் பிடித்தனர்.
பின்னர் ரவுடிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் மோகன் உள்பட 3 போலீசாரும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர். அங்கு அவர்கள் 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது. ரவுடிகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு அறுவை சிகிசை செய்து குண்டுகளை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.தகவல் அறிந்ததும் திருச்சி எஸ்.பி மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த சம்பவம் இன்று திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.