கரூர் மாவட்டம் க.பரமத்தியை அடுத்த அத்திப்பாளையம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 விவசாயிகளின் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் 2 கடிபட்ட நிலையிலும், 2 ஆடுகள் கடித்து உயிரிழந்த நிலையிலும், ஒரு ஆட்டுக் குட்டி மாயமாகியுமிருந்தது.
இதனால் விவசாயிகள் அச்சமடைந்ததை தொடர்ந்து கரூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக கரூர் மாவட்டம் வன அலுவலர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர், முதுமலை மற்றும் கொடைக்கானலிருந்து வந்த வனத்துறை குழுவினருடன் இணைந்து ஆய்வு மேற் கொண்டனர்.
ஆடுகளை அடித்துக் கொன்றது சிறுத்தைதான் என கால் தடங்களை வைத்து வனத்துறையினர் உறுதி செய்தனர்.இதையடுத்து, சிறுத்தை நடமாடிய பகுதிகள் உள்பட 18 இடங்களில் அதிநவீன கேமராக்களை பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
மேலும், அந்த கிராமத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் சிறுத்தை பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளதாக கருத்தப்படும் இடத்தில் கூண்டு வைத்து, அதனுள் ஆட்டுக் குட்டியை கட்டி வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மேலும், வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து அத்திப்பாளையம், அத்திப்பாளையம் புதூர், சேர்வைக்காரம்பாளையம், வி.என்.புதூர் மற்றும் நொய்யல் ஆற்றங்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், குழுக்களாக செல்ல வேண்டும் என்றும், இரவு நேரத்தில் கால்நடைகள் கட்டப்படும் இடங்களில் மின் விளக்கினை எரிய விட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்திபாளையம் பகுதியில் 18 இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்த கண்காணிப்பு கேமராக்களில் நாய்கள் உலாவது மட்டுமே பதிவாகியுள்ளது. சிறுத்தை நடமாட்டம் எதுவும் பதிவாகவில்லை.
இந்நிலையில்.நேற்று இரவு தென்னிலை கிழக்கு ஊராட்சிக்குள்பட்ட தளிக்கோட்டை கிராமத்தைச் சேர்நரத சிதம்பரம் என்பவரது பட்டியில் இருந்த 6 ஆட்டு குட்டிகள் கடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்தில் கடித்தது சிறுத்தை தானா அல்லது வேறு விலங்கா என விசாரணை நடத்தி வருகின்றனர்.