மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கட்சிக்கு எதிராக திருப்பினார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த அவர், பா.ஜ.க.வுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். அதன்பிறகு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.
அதே சமயம் உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்ற வாதத்தை முன்வைத்தது. இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா பெயர், தேர்தல் சின்னத்தை வழங்கி உத்தரவிட்டது.
சிவசேனா பெயர், தேர்தல் சின்னம் வழங்கக்கோரி உத்தவ் தாக்கரே பிரிவு விடுத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது. ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக அங்கீகாரம் செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இந்நிலையில், சிவசேனா கட்சி பெயர், சின்னம் ரூ.2,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது என உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிவசேனா கட்சி பெயர், சின்னத்தைப் பெறுவதற்கு இதுவரை 2000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதியாக கூறுகிறேன். இது முதற்கட்ட புள்ளிவிவரம் மட்டுமே, அதேசமயம் இது 100 சதவீதம் உண்மை. தொடர்ந்து பல விஷயங்கள் விரைவில் வெளிவரும். நாட்டின் வரலாற்றில் இப்படி நடந்ததில்லை என பதிவிட்டுள்ளார்.