இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நேற்று டில்லியில் தொடங்கியது. ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. நேற்று மாலை வரை ஆடிய ஆஸ்திரேலியா10 விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு இந்தியா வேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, ராகுல் ஆகியோர் பேட் செய்தனர்.ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி21 ரன்கள் எடுத்தது.
இன்று காலை 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது. மதிய உணவு இடைவேளைக்குள் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல்(17), ரோகித்(32), புஜாரா(0), ஸ்ரேயஸ் அய்யர்(4) ஆகியோர் அவுட் ஆனார்கள். இந்த 4 விக்கெட்டுகளையும் நேதன் லயன் மட்டுமே எடுத்துள்ளார். அதன்பிறகு பரத் விக்கெட்டையும் அவர் கைப்பற்றினார்.
புஜாராவுக்கு இது 100வது டெஸ்ட் என்ற பெருமையுடன் களம் இறங்கினார். 7 பந்துகளை சந்தித்த அவர் டக் அவுட் ஆனார். இது அவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. இன்று 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய நேதன் லயன் இதுவரை இந்தியாவின் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 44 ரன்கள் எடுத்திருந்தபோது எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார். அவரது அவுட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஹ்ரிமென் வீசிய பந்தில் விராட் கோலி எல்.பி.டபுள்யூ அவுட் ஆனார். ஆனால், பந்து பேட்டிற்கும், பேடிற்கும் இடையே இருந்த நிலையில் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. பந்து முதலில் பேட்டில் பட்டதா? அல்லது பேடில் பட்டதா? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. நடுவர் அவுட் கொடுத்த நிலையில் கோலி ரிவ்யூ கேட்டார். மூன்றாம் நடுவர் ரிவ்யூ செய்தபோதும் பந்து பேட்டிற்கும், பேடிற்கும் இடையே ஒரே நேரத்தில் பட்டது தெரியவந்தது. இருந்தபோதும் மூன்றாம் நடுவரும் களத்தில் இருந்த நடுவரின் முடிவை போன்றே அவுட் கொடுத்தார். இதையடுத்து களத்தில் இருந்து வெளியேறிய விராட் கோலி பின்னர் தனது அவுட் குறித்து பயிற்சியாளர்களுடன் இருந்தபோது தொலைக்காட்சியில் பார்த்தார். அப்போது, அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.மாலை 4 மணி நிலவரப்படி இந்தியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்திருந்தது. இதில் அக்சர்பட்டேல் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்திருந்தார்.
சரியாக மாலை 4.10 மணிக்கு இந்தியா 262 ரன்னுக்கு(83.3ஓவர்) ஆல் அவுட் ஆனது. அதாவது ஆஸ்திரேலியாவை விட இந்தியா ஒரு ரன் குறைவாக எடுத்துள்ளது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ் ஆட உள்ளது.