சென்னை நந்தம்பாக்கத்தில் வீடு, மனை விற்பனை கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது; தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகையில் உட்கட்டமைப்புகள் அரசு மேம்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் புதிய புதிய தொழில் கொள்கைகளையும் அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரியல் எஸ்டேட் தொழில்நுட்ப திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பாதை என்பது எல்லோருக்குமான வளர்ச்சியாக அமையவேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்.
அந்த வகையில் மக்கள் அனைவருக்கும் பெறவேண்டிய வீட்டுவசதியை கிராம மற்றும் நகர்ப்புற திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். குடிசையில்லா நகரங்களை உருவாக்க குடிசை மாற்று வாரியத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். அவர் அமைத்த பாதையில் தான் நம் மாநிலம் பெருமிதத்தோடு வளர்ந்து வருகிறது. பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்வதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். இந்த சூழலில் நாட்டிலேயே நகரமயமாதலில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் நாங்கள் திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக நகரங்கள் – கிராமப் புறங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறோம். புதிய துணைக்கோள் நகரங்கள் உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதனால் வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.