கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே குளித்தலை -மணப்பாறை ரயில்வே கேட் அமைந்துள்ளது.இந்த ரயில்வே கேட்டில் இன்று அதிகாலை மும்பையில் இருந்து மணப்பாறைக்கு பருத்தி பேரல் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி திடீரென பழுதாகி சாலையின் குறுக்கே நின்றது.
சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக லாரி பழுதாகி நின்றதால் குளித்தலை- மணப்பாறை சாலையில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது.
மேலும் ரயில்வே கேட் மூடப்படும் போது இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மேலும் இரு புறங்களிலும் வரும் வாகனங்கள் சாலையின் குறுக்கே லாரி பழுதாகி நின்றதால் இந்த பகுதியை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ரயில்வே கேட் பகுதியில் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதாலும், சில சமயங்களில் ரயில்வே கேட் பழுதாகி வருவதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே குளித்தலை மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலத்தினை விரைந்து அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.