அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள சந்தையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 150 கடைகள் எரிந்து நாசமானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜோர்ஹாட் நகரின் மையப்பகுதியில் உள்ள சௌக் பஜாரில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்க 25 தீயணைப்பு வாகனங்கள் போராடின. தீயை இன்னும் கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் தீயானது நெரிசல் மிகுந்த சந்தையில் வேகமாக பரவியது. அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால், உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டதால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். தீவிபத்தில் எரிந்துபோனது பெரும்பாலும் துணி மற்றும் மளிகைக் கடைகள் என்று தெரிவித்தனர். சாலைகள் குறுகலாக இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தீவிபத்தில் பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.