நேபாளத்தில் கடந்த 15-ந்தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 72 பேர் பலியானார்கள். விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து விமான விபத்துக்கு விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ஜின் கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் விமானியின் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்த விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விபத்து குறித்து 5 பேர் கொண்ட விசாரணை குழு புதிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதாவது, இந்த விபத்தில் மனித தவறு இருப்பதற்கான காரணியை மறுக்க முடியாது என ஐந்து பேரில் ஒருவர் தெரிவித்து உள்ளார். இது சுற்றுலா அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 14 பக்க முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.