அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கடந்த 23.01.2023 அன்று செந்துறை காவல் உதவி ஆய்வாளர் சாமிதுரைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினர் செந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையார்பாளையம் ரோடு திரௌபதி அம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள மரப்பட்டறை அருகே சந்தேகத்திற்கு இடமாக இருந்த சித்துடையார் கிராமம் ரத்தினம் என்பவரது மகன் பால்ராஜ்-யை (48) விசாரணை செய்து அவரை பரிசோதனை செய்ததில் அவரிடம் 1.100 கிலோகிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
இதனை அடுத்து பால்ராஜ் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறையினர் பால்ராஜ் யை காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர் மீது ஏற்கனவே குவாகம் காவல் நிலையத்தில் இரண்டு கஞ்சா வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பால்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புதுக்கோட்டை பாஸ்டர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பால்ராஜ் தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாலும், இவர் வெளியே வந்தால் மேலும் பல்வேறு சமுதாய கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட கூடும் என்பதாலும் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று செந்துறை காவல் ஆய்வாளர் சபரிநாதன், அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் பரிந்துரை செய்தனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லாவின் மேல்பரிந்துரையை ஏற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.அதன்படி இன்று 16.02.2023 பால்ராஜ் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். அதற்கான ஆணை பிரதிகள் மத்திய சிறைக்கு வழங்கப்பட்டது.