கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாதையன் இவரது மகன்கள் பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபுவும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். இதே பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி திமுக ஒன்றாவது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.
கடந்த 8ஆம் தேதி பிரபாகரன் பொது குடிநீர் தொட்டி அருகில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் சின்னசாமி இது குடிநீர் இதில் ஏன் துணி துவைக்கிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு பிரபாகரன் பதில் சொல்லிக்கொண்டே இருக்கும் போதே அங்கு வந்த பிரபாகரனின் தாய் எதோ சொல்ல, சின்னசாமிக்கும் பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .
இந்த நிலையில் அன்று மாலையில் சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் குரு சூர்யமூர்த்தி குணாநிதி ராஜபாண்டியன் அங்கு வந்து பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சின்னசாமி தரப்பினர் தாங்கள் வைத்திருந்த கத்தி, உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு மற்றும் தந்தை மாதையன் ஆகிய 3 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது .
இந்த தாக்குதலில் 3 பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர் .அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இது குறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசாமி, அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி மற்றும் மணிகண்டன் மாதையன், புலிபாண்டி, வேடியப்பன், காளியப்பன் ஆகிய 9 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களை போலீஸார் தேடி வந்தனர் .
இந்நிலையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு (14- 02-23 ) இறந்தார். இதையடுத்து பிரபுகொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றி தலைமறைவான ஒன்பது சந்தேக நபர்களையும் தேடினர்.
இதில் முதலாவதாக குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன்,வேடியப்பன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் குருசூர்யமூர்த்தி சென்னை மாநகர ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். குணாநிதி கல்லூரி மாணவர் ஆவார். இவர்களைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கவுன்சிலர் சின்னசாமி, காளியப்பன், புலிபாண்டி ஆகிய 3 பேரையும் இன்று கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.