கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 23 புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி தெரிவித்ததாவது….
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 18 கல்லூரிகளும், 40 ஆராய்ச்சி நிலையங்களும், 15 வேளாண் அறிவியல் நிலையங்களும் இயங்கி வருகிறது. இந்த நிலையங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப புதிய ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த ஆராய்ச்சிகளின் மூலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து ஆண்டுதோறும் புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் வனப்பயிர்கள் என 23 புதிய ரகங்கள் தமிழ்நாடு அரசின் புதிய
ரகங்கள் வெளியிட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 10 புதிய தொழில்நுட்பங்களும், 6 புதிய பண்ணை இயந்திரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மானாவரி மற்றும் தரிசு நிலங்களில் சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கோடு வன பயிர்களில் சுமார் 4 புதிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பயிர் ரகங்களையும் மற்றும் தொழில் நுட்பங்களையும் விவசாயிகள் பயன்படுத்தி வேளாண் சாகுபடியினை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.