சென்னை பெரம்பூர் நகைக்கடையிலும், அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 இடங்களில் ஏடிஎம் மையங்களிலும் துணிகர கொள்ளை நடந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மாநகரில் உள்ள ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.
அதன் ஒரு கட்டமாக திருச்சி மாநகரில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை செய்யும் நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டத்தை கூட்டினார். கூட்டத்தில் கமிஷனர் சத்தியப்பிரியா பேசியதாவது:
திருச்சி மாநகரில் 190 வங்கிகள், 320 ஏடிஎம்கள் உள்ளன. இவற்றில் 554 ஏடிஎம்களில் தான் இரவு காவலர்கள் உள்ளனர். பல வங்கிகளில் இரவு காவலர்கள் இல்லை. பெரும்பாலான காமிராக்கள் துல்லியமாக தெரியும் வகையில் இல்லை. எனவே கண்காணிப்பு காமிராக்களின் குவாலிட்டியை அதிகப்படுத்தி, நவீனமயமாக்க வேண்டும்.
மறைமுக காமிராக்கள் பொருத்த வேண்டும். ஏடிஎம்களை உடைத்தால் அலாரம் ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.அந்த அலாரம் அருகில் உள்ள காவல் நிலையத்திலும் ஒலிக்கும்படி செய்ய வேண்டும்.
ஏ.டி.எம்களை பொருத்தும் பொழுது தரையில் கான்கிரீட் தளத்துடன் பிணைத்து அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும் அல்லது சுவற்றுடன் பொருத்தும் பொழுது இரும்பு கம்பியுடன் பிணைத்து அசைக்க முடியாதவாறு பொருத்தப்பட வேண்டும்
இரவு நேரங்களில் அனைத்து ஏ.டி.எம்களில் பொருத்தப்பட்டுள்ள CCTV கோமிராக்களை ஒரே இடத்தில் இணைப்பு கொடுத்து (கட்டுபாட்டறை போன்று) சுழற்சி முறையில் அலுவலர்களை வைத்து கண்காணிக்க வேண்டும்.
ஏ.டி.எம் உள்ள இடத்திற்கு நேர் எதிரே ஏ.டி.எம்யை பார்த்தவாறு தரமான கேமிரா பொருத்தப்பட வேண்டும்.
ஏ.டி.எம்-க்கு வரும் வழி, போகும் வழிகளில் அங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் (CCTV) பொருத்தப்பட வேண்டும்.
வங்கிகளை பூட்டி சென்ற பிறகு Motion Technology முறையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பின் எச்சரிக்கை குறுஞ்செய்தி அலைபேசிகளுக்கு வரும் வசதி உள்ள CCTV மற்றும் DVRகளை பொருத்த வேண்டும். இதனை ஒரு மாதத்திற்குள் செய்திட வேண்டும் என கமிஷனர் கேட்டுக்கொண்டார்.