விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில் கடந்த 2009 மார்ச் 18ல் நடந்த போரில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அவரது சடலமும் பத்திரிகைகளில் புகைப்படங்களாக வெளியானது. இந்த நிலையில் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் கொல்லப்படவில்லை. அவர் விரைவில் வெளியில் வருவார். நான் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறேன். பிரபாகரன்அனுமதியின் பேரிலேயே இந்த தகவலை உங்களுக்கு சொல்கிறேன் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தஞ்சையில் கூறினார்.
அதே நேரத்தில் பிரபாகரன் எந்த நாட்டில் இருக்கிறார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. பிரபாகரனின் மகன் உயிருடன் இருக்கிறார் என்றும் சொல்லவில்லை. பிரபாகரனுடன் அவரது மனைவி, மகள் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறினார்.
இந்த பேட்டியின்போது ஈழத்து உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன், உலகத்தமிழர் பேரமைப்பை சேர்ந்த முருகேசன், தியாகு ஆகியோர் உடனிருந்தனர். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியை பத்திரிகையாளர்களிடம் சொல்வதற்கு முன் அவர்கள் தங்களுக்குள் இனிப்பை பகிர்ந்து கொண்டு மகிழ்வை வெளிப்படுத்தினர்.
திடீரென இந்த தகவலை அவர் வெளியிட்டது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, இலங்கிலாந்து, சீனா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் தங்கள் உளவுப்படையை உசுப்பேற்றி பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என விசாரணை நடத்த உத்தரவிட்டதாக செய்திகள் பரவியது. குறிப்பாக இந்தியா, இலங்கையில் இது பெரும் விவாதத்துக்குள்ளானது. இரு நாட்டு அரசுகளும் இது குறித்து தங்களது உளவுப்படை மூலம் விசாரிக்கத் தொடங்கி விட்டது.பிரபாகரன் பற்றிய ஹேஷ்டேக் நேற்று உலகம் முழுவதும் வைரலானது.
நெடுமாறன் பேட்டி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் மத்திய, மாநில உளவுப்படை அதிகாரிகள், நெடுமாறன் பேட்டிகொடுத்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முற்றுகையிட தொடங்கினர். பத்திரிகையாளர்கள் வெளியே வந்ததும் பிரபாகரன் எந்த நாட்டில் இருக்கிறார், எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என நெடுமாறன் சொன்னாரா என கேட்கத்தொடங்கினர்.
பிரபாகரன் ஆஸ்திரேலியாவில் இருக்கலாம், இங்கிலாந்தில் இருக்கலாம் என பல தகவல்கள் கூறப்பட்டு வருகிறது. இந்த பேட்டியை கொடுப்பதற்கு முன் நெடுமாறன் பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் நெடுமாறன் அழைத்தாராம். அவரும் தஞ்சை வந்து அங்குள்ள தங்கி இருந்தார்.
தஞ்சை வந்த வைகோ இரவில் அங்கு தங்கி இருந்தார். அவரிடம் பிரபாகரன் பற்றிய செய்தியை நெடுமாறன் பகிர்ந்து கொண்டாராம். இந்த நிலையில் திடீரென அதிகாலையில் வைகோ தஞ்சையில் இருந்து காரில் திருச்சி வந்து சென்னை சென்று விட்டார். அவர் ஏன் இந்த பேட்டியை புறக்கணித்தார் என்று தெரியவில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கும் கருத்தில் அவருக்கு மாறுபட்ட கருத்து இருந்ததா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது தெரியவில்லை. இது போல மேலும் பல தமிழக தலைவர்களுக்கு நெடுமாறன் அழைப்பு விடுத்த நிலையில் யாரும் அங்கு வரவில்லை என கூறப்படுகிறது.
நெடுமாறன் அறிவித்த சிறிதுநேரத்தில் இலங்கை ராணுவம், பிரபாகரன் உயிருடன் இருப்பதை மறுத்தது. அதே போல விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருக்கமாக இருந்த வைகோவும், பிரபாகரன் உயிருடன் இருந்தால் அதிக சந்தோஷப்படுபவன் நான் தான். என்னிடமும் சில போராளிகள் தொடர்பில் உள்ளனர். அவர்கள் சொன்ன தகவல்படி பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற தொனியில் கருத்து கூறி உள்ளார். இதுபோல சீமானும் பிரபாகரன் உயிருடன் இல்லை. அவர் மகனை கொலைகளத்தில் விட்டு விட்டு தான் மட்டும் தப்பி ஓடி இருக்க மாட்டார் என கூறி இருந்தார்.
அதே நேரத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், இதுபற்றி கூறும்போது பிரபாகரன் உயிருடன் இருப்பது குறித்து மத்திய அரசு தான் விளக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளார். எனவே பிரபாகரன் பற்றிய செய்திகள் 2வது நாளாக இன்று உலக அரசியல் தலைவர்கள் மத்தியில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.