விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில் கடந்த 2009 மார்ச் 18ல் நடந்த போரில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அவரது சடலமும் பத்திரிகைகளில் புகைப்படங்களாக வெளியானது. இந்த நிலையில் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் கொல்லப்படவில்லை. அவர் விரைவில் வெளியில் வருவார். நான் அவருடன் தொடர்பில் இருக்கிறேன். பிரபாகரன் கூறியதன் பேரிலேயே இந்த தகவலை உங்களுக்கு சொல்கிறேன் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தஞ்சையில் கூறினார்.
அதே நேரத்தில் அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. பிரபாகரனின் மகன் உயிருடன் இருக்கிறார் என்றும் சொல்லவில்லை. பிரபாகரனுடன் அவரது மனைவி, மகள் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறினார்.
இந்த பேட்டியின்போது வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஈழத்து உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன், உலகத்தமிழர் பேரமைப்பை சேர்ந்த முருகேசன், தியாகு ஆகியோர் உடனிருந்தனர். பிரபாகரன் உயிருடன்
இருக்கிறார் என்ற செய்தியை பத்திரிகையாளர்களிடம் சொல்வதற்கு முன் அவர்கள் தங்களுக்குள் இனிப்பை பகிர்ந்து கொண்டு மகிழ்வை வெளிப்படுத்தினர்.
திடீரென இந்த தகவலை அவர் வெளியிட்டது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தியா, இலங்கையில் இது பெரும் விவாதத்துக்குள்ளானது. இரு நாட்டு அரசுகளும் இது குறித்து தங்களது உளவுப்படை மூலம் விசாரிக்கத் தொடங்கி விட்டது. பிரபாகரன் ஆஸ்திரேலியாவில் இருக்கலாம், இங்கிலாந்தில் இருக்கலாம் என பல தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.