தஞ்சை, மதுக்கூர் அருகே ரஷ்ய பெண்ணை இளைஞர் தமிழ் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு கரம் பிடித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த மணியன் – கிருஷ்ணம்மாள் தம்பதியின் மகன் பிரபாகரன் (33). இவர் ரஷ்யாவில் யோகா ஆசிரியராக, கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த கென்னடி – மயூரா தம்பதியின் மகள் அல்பினா (31) என்பவர் பிரபாகரன் யோகா கற்று வந்துள்ளார். யோகா கற்றுத் தந்த பிரபாகரனுக்கும், அல்பினா மனதில் மின்னல் வெடித்து, இதயம் இணைய காதல் என்ற அழகான மலர் மலர்ந்து
உள்ளது. மொழியோ, மதமும், நாடோ இவர்களுக்கு பெரிதாக படவில்லை. காதல் என்ற அன்பு மலர் பூத்து நிற்க இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.
இது பற்றி மணமகள் வீட்டாரிடமும், தனது பெற்றோரிடம் பிரபாகரன் பேசி தங்கள் காதல் வலுவானது என்று நிரூபித்தார். இதையடுத்து மனமொத்த இந்த காதலர்களின் காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்ட, மகிழ்ச்சியில் திளைத்தார் பிரபாகரன்.
இதையடுத்து மதுக்கூரில் பிரபாகரன், ஓதுவார்கள் முன்னிலையில், அல்பினாவுக்கு தாலி கட்டி, தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மணமக்கள் உறவினர்கள், கிராமத்தினரிடம் ஆசி பெற்றனர்.
இதுகுறித்து மணமகன் பிரபாகரன் கூறுகையில், நான் யோகா டீச்சராக பணியாற்றி வருகிறேன். என்னிடம் யோகா மாணவியாக அல்பினால் பயிற்சிக்காக வந்து கொண்டு இருந்தார். இருவரது மனமும் ஒன்றாக இருந்ததால் காதல் மலர்ந்தது. எங்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன், அவர்கள் முன்னிலையே சிறப்பாக திருமணம் நடந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மணமகள் அல்பினால் கூறுகையில், ரஷ்யா கலாச்சாரத்தை விட, தமிழ் கலாச்சாரமும், இங்குள்ள மக்கள், வாழ்வியல் முறை, இயற்கை சார்ந்த அமைப்புகளும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். கூடிய விரைவில் இங்குள்ள மக்களிடம் சகஜமாக தமிழ் பேசி நானும் ஒரு தமிழ் பெண்ணாக மாறிவிடுவேன் என்றார். இந்த காதல் ஜோடிகளின் திருமணத்திற்கு வந்த உள்ளூர் மக்களுக்கு மிகவும் பெருமிதமாக இருந்தது அல்பினாலின் கருத்து என்றால் மிகையில்லை.