நாகை மாவட்டம் திருக்குவளையில் சப்தவிடங்களில் ஒன்றான தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்வாலய கும்பாபிஷேக விழா, 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தியாகராஜ சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழாவின் விக்னேஷ்வர பூஜை கடந்த 8, தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள வண்டமருபூங்குழலாள், பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூர்ணாஹூதி தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னர் மேளதாள வாத்தியங்களுடன் கடங்கள் கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டன. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலில் உள்ள கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 24 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், தருமபுர ஆதீனம் 27,வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதினம், மதுரை ஆதினம், செங்கோல் ஆதினம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு, ஜெயச்சந்திரன், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
