ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் என 167 பேர் பொள்ளாச்சிக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஆழியார் அருகே உள்ள பள்ளிவளங்கள் அணைக்கட்டுப் பகுதி குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள் தடையை மீறி ஒரு சில மாணவர்கள் அணைப்பகுதியில் குளித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக லோகசுதன் ( 17) 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்கும்போது நீரில் மூழ்கியுள்ளார் .இதை அறிந்த சக
மாணவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த மாணவரை போராடி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்பு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவன் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாணவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா வந்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் இங்கு அடிக்கடி ஆற்றில் மூழ்கி உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ஆகையால் பொதுப்பணித்துறையினர் மூலம் குளிக்க யாரும் செல்லாதவாறு கம்பி வேலி அல்லது தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.