தாலி கட்டும் நேரத்தில் பெண் மாயமாவது, அல்லது மணமகன் மாயமாவது சினிமாவில் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு இதுபோன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. திருச்சியிலும் நேற்று அப்படி ஒரு திருமணம் தாலி கட்டும் நேரத்தில் தடைபட்டுவிட்டது. இதுபற்றிய விவரம் வருமாறு…..
திருச்சி காட்டூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், மன்னார்புரத்தை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று காலை காட்டூரில்(தஞ்சை ரோடு) உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. இதையொட்டி மணமக்கள் இருவரும் மணக்கோலத்தில் தேவாலயம் அழைத்து வரப்பட்டனர்.
தாலி கட்டுவதற்கு முன் பாதிரியார், மணமகனிடமும், மணமகளிடமும், இவரை திருமணம் செய்ய சம்மதமா? என கேட்டு மரணம் என்னை பிரிக்கும் வரை இவரோடு வாழ சம்மதிக்கிறேன் என உறுதி மொழி ஏற்கும் சடங்கை நடத்தினார். அப்போது மணமகளிடம் இந்த மணமகனை திருமணம் செய்ய சம்மதிக்கிறாயா என பாதிரியார் கேட்டபோது, எனக்கு விருப்பம் இல்லை. நான் வேறு ஒரு வாலிபரை விரும்புகிறேன் என மணமகள் கூறி விட்டார்.
இதனால் மணமகன் மட்டுமல்ல, தேவாலயத்தில் திரண்டிருந்த நூற்றுகணக்கான சொந்தபந்தங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மணமகளை அழைத்து சென்று சமாதானம் செய்ய பெண் வீட்டார் முயன்றனர். அதற்குள் மணமகன் வீட்டாரும் சுதாரித்துக்கொண்டனர். இந்த நிலையில் பாதிரியாரும் திருமண சடங்கை நடத்தாமல் அத்துடன் முடித்து விட்டார்.இதனால் திருமணம் தடைபட்டது.
இருவீட்டாரும் நல்ல வசதி படைத்தவர்கள், ஏற்கனவே தூரத்து உறவுக்காரர்கள் என்பதால் பெரிய அளவில் மோதல் போன்ற பிரச்னைகள் ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் அனைவரும் சோகத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர். திருமணத்தையொட்டி இரு வீட்டார் சார்பில் பிரியாணி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் வந்திருந்த உறவுக்காரர்கள், நண்பர்கள் யாரும் விருந்து சாப்பிடாமல் கலைந்து சென்று விட்டனர்.