Skip to content
Home » 2003-ம் ஆண்டு பேட்ஜ் போலீசாரை பழைய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க ஹைகோர்ட் உத்தரவு..

2003-ம் ஆண்டு பேட்ஜ் போலீசாரை பழைய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க ஹைகோர்ட் உத்தரவு..

தமிழ்நாடு அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்தியது. இந்த திட்டம் அமலுக்கு வந்தபின்னர், பணி நியமனம் பெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டமே பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தங்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர உத்தரவிட வேண்டும் என்று சிவசக்தி உள்ளிட்ட 25 போலீஸ்காரர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘2002-ம் ஆண்டு 3 ஆயிரத்து 500 போலீஸ்காரர்கள் தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மனுதாரர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது’ என்று என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், 2002-ம் ஆண்டு தேர்வு நடைமுறைகள் தொடங்கியிருந்தாலும், 2003-ம் நவம்பர் மாதம்தான் மனுதாரர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். அதனால் புதிய ஓய்வூதிய திட்டம்தான் இவர்களுக்கு பொருந்தும். பழைய ஓய்வூதிய திட்ட பலன்களைப் பெற அவர்களுக்கு தகுதியில்லை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை மூலம் பெண் போலீஸ்காரர்கள், ஓராண்டுக்குள்ளாகவே பணி நியமனம் வழங்கப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பலன் பெறுகின்றனர். ஆனால், அதே காலகட்டத்தில் தேர்வு நடைமுறைகளை சந்தித்த ஆண் போலீஸ்காரர்களையும் சமமாக பாவிக்க வேண்டும். ஆண் போலீஸ்காரர்கள் நியமனத்துக்கு 11 மாதங்கள் தாமதமானதற்கு அவர்கள் காரணமல்ல. அதனால் அவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். இந்த நடைமுறைகளை 12 வாரங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *