பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’ கம்பீரம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். கடந்த ஆண்டு அதில் துரானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன் அதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் அவர் கணவர் மீது மும்பை ஒஷிவாரா போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், அதில் துரானி தன்னை அடித்ததாக கூறி இருந்தார். இதேபோல தன்னுடைய முகத்தில் திராவகம் வீசிவிடுவேன், சாலை விபத்து மூலம் கொன்றுவிடுவேன் என கணவர் மிரட்டியதாகவும், தொழுகை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தேரியில் உள்ள வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகை மாயமாகி இருந்ததை ராக்கி சாவந்த் பார்த்தார். காவலாளி மூலம் கணவர் அதில் துரானி வீட்டுக்கு வந்து சென்றதையும் அவர் தெரிந்து கொண்டார். எனவே அவர் கணவர் மீது மீண்டும் நேற்று முன்தினம் ஓஷிவாரா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.
ராக்கி சாவந்த் அளித்த புகார்கள் தொடர்பாக போலீசார் அதில் துரானி மீது மோசடி, காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தனக்கு ஜாமீன் கோரி அவர் நீதிமன்றத்தை நாடி உள்ளார். இதனிடையே நீதிமன்றத்துக்கு வெளியே மீடியாக்களை சந்தித்த ராக்கி சாவந்த், அதிலுக்கு ஜாமீன் கிடைக்கக்கூடாது. அதனால் தனது தரப்பு நியாயத்தை கூற கோர்ட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது மருத்துவ பரிசோதனைகள் முடிந்துவிட்டது என்றும் அனைத்து ஆதாரங்களையும் சமர்பித்திருப்பதாகவும் ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளளார்.
அதில் தன்னை சித்திரவதை செய்து ஏமாற்றிவிட்டார் என்றும் தனது ஓடிபியை திருடி தனது பணத்தை திருடினார் என்றும் ராக்கி சாவந்த் குற்றம்சாட்டினார். தனது கணவர் அதில் துரானி தன்னை நிர்வாணமாக படம் பிடித்து அதனை பணத்திற்காக விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை ராக்கி சாவந்த், தனது நிர்வாண வீடியோக்களை எடுத்து அதனை அதில் விற்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய இந்த வழக்கு சைபர் கிரைம் துறையிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதில் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தனு சாண்டலுடன் திருமணத்திற்கு புறம்பான தொடர்பில் இருப்பதாகவும், அடுத்து அவரையும் திருமணம் செய்வார் என்றும் கூறியுள்ளார்.