ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். நேற்று மாலை அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு வேப்பம்பாளையத்தில் நடைபெற்றது. இதில்எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டஅதிமுக தொண்டர் ஒருவர் அருகில் இருந்த சிறுமியிடம், அத்துமீறி உள்ளார். இதை கவனித்த சிறுமியின் தாயார் ஆவேசமடைந்து அந்த நபரை சரமாரியாக தாக்கினார். கூச்சல் போட்டு தகராறும் செய்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். முதல் நாளே பிரச்னை வேறுவிதமாக போய்விட்டது. இது நமக்கு பெரும் தலைவலியாகிவிடும் என கருதி அந்த பெண்ணை சமாதானம் செய்து இதை யாரிடமும் சொல்லாதே என அனுப்பி வைத்தனர். உடனடியாக அந்த தாயாரையும், சிறுமியையும் சில அதிமுக நிர்வாகிகள் அங்கிருந்து அழைத்து சென்று விட்டனர். இதனால் பத்திரிகையாளர்கள் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. அந்த பெண்ணை போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் என அதிமுகவினர் கெஞ்சினர். சிலர் அந்த பெண்ணுக்கு பணத்தை கொடுத்து அமைதிப்படுத்தி அனுப்பி விட்டனர். ஆனாலும் இந்த சம்பவம் அங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.