துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6ம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17000ஐ தாண்டி உள்ளது. பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.
துருக்கியை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அது அமர்ந்திருக்கும் டெக்டோனிக் தகடுகளை மூன்று அடி (10 மீட்டர்) வரை நகர்த்தியிருக்கலாம் என்று நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். இத்தாலிய நில அதிர்வு நிபுணர் பேராசிரியர் கார்லோ டோக்லியோனி இதுபற்றி கூறும்போது, சிரியாவுடன் ஒப்பிடுகையில், மதிப்பீடுகளில் துருக்கி உண்மையில் ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை நழுவியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட், சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோ நகர் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என்றார்.