ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில தினங்களாக தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று இவர் வீரப்பன் சத்திரம் ரோடு பகுதியில் வீடு வீடாக நடந்து சென்று காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவு திரட்டினார். வழிநெடுகிலும் அவருக்கு ஏராளமான பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.