மாநிலங்களவையில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலளித்து பேசியதாவது – சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி 90 முறை மாநில ஆட்சியை கலைத்தது யார் தெரியுமா? அதிலும் ஒருவர் மட்டும் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி 50 முறைகளுக்கு மேல் மாநில ஆட்சியை கலைத்திருக்கிறார். அது இந்திரா காந்தி தான். மாநில ஆட்சியை கலைப்பதில் அரைசதம் அடித்திருப்பவர் இந்திரா காந்தி. முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் ஆட்சியை கவிழ்த்தது இந்திரா காந்தி. அந்த இந்திரா காந்தியின், கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளீர்கள் என்று திமுகவை பார்த்து கேள்வி எழுப்பினார்.
மேலும், எம்ஜிஆர் ஆட்சியையும் காங்கிரஸ் கட்சி கலைத்திருக்கிறது. அதேபோல் எதிர்க்கட்சி வரிசையில் நிற்கும் சரத் பவார் முதலமைச்சராக இருந்த போது, அவரின் ஆட்சியை கலைத்ததும் காங்கிரஸ் தான். ஆந்திராவில் என்டிஆர் ஆட்சியை கலைக்க காங்கிரஸ் முயற்சித்தது. இப்போது ஏராளமான கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கின்றன. ஆனால் ஒரு காலத்தில் அந்த கட்சிகளின் மாநில அரசுகளை கலைத்தது காங்கிரஸ் தான்” என்று பிரதமர் விமர்சித்தார்.