ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி பேசினார். அப்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று, அதானி பிரச்னை குறித்து பேசும்படி ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினர்.எதிர்க்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டு மக்கள் மாநிலங்களவையை உற்று நோக்குகிறார்கள். நீங்கள் வீசி எறியும் சேற்றில் இருந்து தாமரை மலரும். ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு கண்டு வருகிறோம். காங்கிரஸ் எந்த பிரச்னைக்கும் தீர்வு கண்டதில்லை. தீர்வு காண்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் ஓடி ஒளிந்தது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளின் நலனுக்காக வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டது. ஆனால் எழைகள் வங்கிகளுக்கு செல்ல முடியவில்லை. நாங்கள் வந்த பிறகு தான் கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளில் கணக்கு தொடங்கினர். 60 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் குழிகளை மட்டுமே ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் கணக்கு மூடப்பட்டு விட்டது. தொலைதூர கிராமங்களுக்கும் வளர்ச்சி திட்டங்களை கொண்டு செல்வதில் வெற்றி கண்டு உள்ளோம். பா.ஜ.க. அரசு செயல்படக்கூடிய அரசு.
உத்வாலா திட்டத்தில் 14 கோடி எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இரவு பகலாக உழைக்கிறோம். இதை பெருமையுடன் கூற முடியும். நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்களின் செயல்பாடுகள் அருவருக்கும் வகையில் உள்ளது- எங்களின் வாக்குறுதிகள் அனைத்தும் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களின் நம்பிக்கை தான் எல்லாவற்றையும் விட மேலானது. அவற்றை நாங்கள் பெற்று விட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்