இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை ராமேஸ்வரம் நோக்கி வந்த படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே அவர்களும் ஒரு படகில் ராமேஸ்வரம் கடலுக்கு சென்று கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு படகில் இருந்து ஏதோ ஒரு பெட்டி கடலில் வீசப்படுவதை கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த படகை மறித்து அதில் ஏறி சோதனை போட்டனர்.
அப்போது அந்த படகில் கடத்தல் தங்கம் எதுவும் சிக்கவில்லை. எனவே படகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது படகில் இருந்த தங்கத்தை கடலில் வீசிவிட்டதாக தெரிவித்தனர். உடனடியாக அந்த இடத்தை கண்காணித்து கடலுக்குள் தேடும் பணியில் நீச்சல் வீரர்களை ஈடுபடுத்தினர். கடலுக்குள் மூழ்கும் தூத்துக்குடியை சேர்ந்த சில நீச்சல் வீரர்களை அழைத்து வந்து ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடாவில் தேடுதல் பணியில் ஈடுபடுத்தினர். அப்போது ஒருவர் கடலில் கிடந்த ஒரு பெட்டியை மீட்டு வந்தார்.
அதை திறந்து பார்த்தபோது அதில் 12 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் இருந்தது. இதன் மதிப்பு 7.5 கோடி ரூபாய். இது தொடா்பாக தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.