துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.
மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதனை அடுத்து, பேரிடர் பகுதிகளுக்கு துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் சென்று பார்வையிட்டு உள்ளார். அப்போது, நிலநடுக்க பாதிப்புக்கு 8,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 50 ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர் என கூறியுள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவின் மொத்த உயிரிழப்பு 15 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இந்நிலையில், பாகிஸ்தானின் தகவல் மந்திரி மரியும் அவுரங்கசீப் வெளியிட்ட செய்தியில், துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்குவதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துருக்கி நாட்டின் அங்காரா நகருக்கு செல்ல இருக்கிறார். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். இதற்காக இன்று (வியாழ கிழமை) நடைபெற உள்ள அனைத்து கட்சி மாநாடு ஒத்தி வைக்கப்படுகிறது.
கூட்டணியினருடன் ஆலோசித்து அடுத்த தேதி அறிவிக்கப்படும் என என தெரிவித்து உள்ளார். இதேபோன்று, துருக்கியில் நிலநடுக்க பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரதம மந்திரி நிவாரண நிதியை உருவாக்கி அந்நாட்டுக்கு வழங்க முடிவாகி உள்ளது. இதன்படி, ஒரு மாத கால சம்பளம் நன்கொடையாக வழங்கப்படும் என அமைச்சரவை அறிவித்து உள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நமது சகோதர நாடான துருக்கிக்கு மனமுவந்து உதவும்படி கேட்டு கொண்டுள்ளார் என மற்றொரு டுவிட்டர் பதிவில் மரியும் தெரிவித்து உள்ளார். எனினும், ஷெரீப்பின் துருக்கி பயணம் ஒத்தி போடப்பட்டு உள்ளது.
இதுபற்றி தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி நிறுவனம் சார்பில் வெளியான தகவலில், நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் தெளிவற்ற வானிலையால், ஹெலிகாப்டர் இறங்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது என பாகிஸ்தான் தரப்பு தெரிவிக்கின்றது. நிவாரண பணிகளில் துருக்கி அதிபர் மற்றும் பிரதமர் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், ஷெபாஸ் ஷெரீப்பை அங்காராவில் வரவேற்க முடியாத சூழல் காணப்படுகிறது என செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1