கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த 4வது சோமவார விழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பக்தர்கள் குடிப்பாட்டுக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டு காரர்கள் தேங்காய் பழம் உடைத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த 4வது சோமவார விழாவில் குளித்தலை அருகே நங்கவரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்ற இளைஞர் 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
இவரது தாத்தா நாகராஜன் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக உலக அமைதிக்காகவும், மக்கள் பசி பட்டினி இன்றி நல்வாழ்வு வாழ்ந்திடவும் 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வந்தார். அவரது மறைவிற்குப் பின் தனது தாத்தாவின் வேண்டுதலை தொடர்ந்து 13 வது முறையாக அய்யர் மலை 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.