திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் தன் மீதும், தன் குடும்பத்தார் மீதும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் அவதூறாக விமர்சனம் செய்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி விஜயா முன்னிலையில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு ஏப்ரல் 8ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது டிஐஜி வருண்குமார், சீமான் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். பின்னர் இந்த வழக்கு ஏப்ரல் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இன்று டிஐஜி வருண்குமார் தனது வழக்கறிஞர் முரளிகிருஷ்ணாவுடன் ஆஜரானார். சீமான் ஆஜராகாததால் வழக்கு மே 8ம் தேதிக்கு ஒததிவைக்கப்பட்டது. அன்றைய தினம் சீமான் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக வருண்குமார் தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணா கூறியதாவது:
சீமான் தரப்பு வாதங்கள் எழுத்துப்பூர்வமாக நீதிபதியிடம் முன்வைக்கப்பட்டது, மே எட்டாம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டாயமாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏப்ரல் எட்டாம் தேதி சீமான் ஆஜரானபோது, பெரும்பாலான கார்களில் வந்த நாம்தமிழர் கட்சியினர் டிஐஜி காரின் அருகே தங்கள் காரை நிறுத்திவிட்டு, சீமான் வாழ்க என கோசமிட்டும் ராமஜெயம் வழக்கு என்ன ஆச்சு எனக்கேட்டு மிரட்டல்விடுத்ததாகவும், இதுதொடர்பாக டிஐஜி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.