Skip to content

2026லும் திமுக ஆட்சி தொடரும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour
சட்டமன்றத்தில் உள்துறை மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின்  இன்று பேசியதாவது: தமிழ்நாட்டில்  7வது முறையாகவும் திமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.  கலைஞர் என்னை பார்த்து ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றார். இப்போது  கலைஞர் உயிரோடு இருந்திருந்தால்  ஸ்டாலின் என்றால் சாதனை சாதனை  சாதனை என்று சொல்லி இருப்பார்.  2024-25ல் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக  தமிழக அரசின் பொருளாதார வளர்ச்சி 9.6% பெற்றுள்ளது.  தேசிய அளவிலான வளர்ச்சி 6.5 % தான்.   ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசின் புள்ளி விவரங்களே இதை தெரிவித்துள்ளன. மின்னணு ஏற்றுமதியில் பாதிக்கும் மேல் தமிழ்நாட்டில் இருந்து தான் ஏற்றுமதி ஆகிறது.  தமிழ்நாட்டில் இடைநிலைப்பள்ளி வரை இடை நிற்றல் இல்லை.  உயர்நிலைப்பள்ளி செல்வோர் எண்ணிக்கை 47% இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 13.2 %. ஆனால் தமிழ்நாட்டில் 1.4% மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தால்,  ரத்த அழுத்தம்,  நீரிழிவு நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 1.16 லட்சம் மருத்துவ படுக்கைகள் உள்ளன. மேலே பாம்பு, கீழ் நரிகள், குதித்தால் அகழி,  ஓடினால் தடுப்பு சுவர் என்பார்களே அப்படித்தான் ஒரு புறம் மத்திய அரசு,  இன்னொருபுறம்  கவர்னர், இன்னொரு புறம் நிதி நெருக்கடி. இந்த தடைகளை கடந்து தான் சாதனை படைத்து உள்ளோம்.  இது தனி மனித சாதனை அல்ல. அமைச்சரவையின் சாதனை.  ஒவ்வொரு துறையும் போட்டி போட்டு செயல்படுகிறது.  இந்த அறிவிப்புகள்  வளர்ச்சிக்கான அடிக்கல்லாக அமைந்தது. சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.  சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22  பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவையின் கண்ணியம் குறையாமல் அவையை நடத்தி வரும் பேரவைத் தலைவர் , துணைத்தலைவர் அவர்களுக்கு  நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அமைதியான மாநிலத்தில் தான் தொழில் வளம் பெருகும். தமிழ்நாடு இப்போது  தொழில் வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது.  தமிழ்நாட்டில் சாதிச்சண்டை, மதச்சண்டை இல்லை.  குற்றச்சம்பவங்களில்  குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள்.  காவல்துறை உடனுக்குடன்  நடவடிக்கை எடுக்கிறது. தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க சிலர் செய்த முயற்சி பலிக்கவில்லை.  அரசியல் ஆதாயத்திற்காக, உள்நோக்கத்துடன்  சிலர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார்கள்.  சட்டம் ஒழுங்கு சீர்குலைய இது மணிப்பூரோ, காஷ்மீரோ அல்ல. காவல்துறை உங்கள் நண்பன் .  காவல்துறையும், பொதுமக்களும்  ஒருவரோடு ஒருவர் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.  பொதுமக்கள் சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும். செப்டம்பர் 6ம் தேதி இனி காவலர் தினமாக  கொண்டாடப்படும்.  கடமை கண்ணியம், கட்டுப்பாடு  என சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு விருது  , பதக்கங்கள் வழங்கி சிறப்பிக்கப்படும்.   அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டு வருகிறது.  குற்ற சம்பவங்களில் பூஜ்ஜியம் என்ற நிலை எட்டப்பட வேண்டும்.  கோட்டூர் தீயணைப்பு நிலையத்துக்கு   சொந்த கட்டிடம் கட்டப்படும்.  காவல்துறைக்கான பரிந்துரைகள் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும்  காவலர்கள் ஆண்டுதோறம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும் பொது புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும். எதிர்க்கட்சித்தலைவர் விடுத்த அனைத்து கோரிக்கைகளும்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். குளித்தலை,வேப்பந்தட்டை உள்பட 7 இடங்களில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தப்படும்.  20 மாவட்டங்களில் காவலர் தங்குமிடம் அமைக்ப்படும். கோவையில்  தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படும். 50 நடமாடும் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.  திருச்சி மற்றும் விழுப்புரத்தை  தலைமையிடமாக கொண்டு தீயணை்பபு  மண்டலங்கள்  உருவாக்கப்படும். எஸ்.ஐ. நிலையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும்,  இன்ஸ்பெக்டர்கள்  உள்ள போலீஸ் நிலையமாக உருவாக்கப்படும்.  உதகையில் காவலர் குடியிருப்பு ஏற்படுத்தப்படும். இதுரை நீங்கள் பார்த்தது திராவிட மாடல்ஆட்சியின் பார்ட் 1 தான்,  2026ல் பார்க்கப்போவது திராவிட மாடல் ஆட்சியின்  2.0. அதில் தமிழகம் வரலாறு படைக்கும்.  இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத சாதனைகளை  திராவிட மாடல் அரசு செய்துள்ளது.10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை விட பல மடங்கு சாதனைகளை செய்துள்ளது. தமிழ்நாட்டுக்காக தமிழர்களுக்காக மாநில உரிமைகளுக்காக எனது பயணம் தொடரும் . தமிழ்நாட்டை அடமானம் வைக்க நினைப்பவர்களாலும், அபகரிக்க நினைப்பவர்களாலும் ,  தமிழ்நாட்டை ஒருபோதும் சூறையாட முடியாது. இந்த துறை சிறப்பாக  செயல்பட எனக்கு உறுதுணையாக இருக்கும் உள்துறை செயலாளர் தீரஜ்குமாா்,  டிஜிபி  சங்கர் ஜிவால்,  சென்னை ஆணையர்   அருண்,  தீயணைப்புத்துறை டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு, வெல்க தமிழ். இவ்வாறு முதல்வர் பேசினார்.  இந்த உரையின்போது காவல்துறைக்கு மொத்தம் 102 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். அப்போது அவையில் அதிமுகவினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.  முதல்வர் கூறிய குற்றசாட்டுக்கு பதில் அளிக்க வாய்ப்பு  வழங்க வேண்டும் என்று அதிமுகவினர் கூச்சல் போட்டனர். இந்த நிலையில்  மானியக்கோரிக்கை தீர்மானம்   நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார். அப்போதும் அதிமுகவினர் கூச்சல் போட்டுக்கொண்டே இருந்தனர்.  இன்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது.
error: Content is protected !!