1997ம் ஆண்டு மதுரை சிறை அதிகாரி ஜெயப்பிரகாஷ் சிறைச்சாலை வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யபட்டனர். அதில் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த அபுதாஹிர் என்பவர் கைது செய்யப்பட்டார். கைதானவர்கள் அல்-உம்மா அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. இந்த வழக்கு விசாரணை யில் கடந்த 2003ம் ஆண்டு இவர்களுக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து இவரும் இவருடன் கைது செய்யப்பட்டவர்களும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அபுதாஹிர் நீரிழிவு நோயினாலும் சில வருடங்களுக்கு முன் முடக்கு வாதத்தினலும் பாதிக்கப்பட்டு சிறைத்துறை சார்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் நிரந்தர பரோலில் வெளிவந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அபுதாஹிர் உயிரிழந்தார். தற்போது இவருக்கு வயது 42. சிறை நடைமுறைகள் முடிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் அபுதாஹிரின் உடல் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.மேலும் இவர் 1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் கைதாகி விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.